Published : 08 Sep 2023 06:15 AM
Last Updated : 08 Sep 2023 06:15 AM

மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? - கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் வழங்குவதுபோல போலி கட்டிட அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு தம்பதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு பெண் மீது மாநகராட்சி சார்பில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனைப் பிரிவுகள் மற்றும் வீடு கட்ட அங்கீகாரம், வீடுகள் கட்டுவதற்காக வாங்கும் கடன் என பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதில், ஒரு தம்பதி உட்பட 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் நேற்று முன்தினம் இரவு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

போலி கையெழுத்து, முத்திரை: அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடலூர் பாடலீஸ்வரர் நகரில் உள்ள ஒரு மனைப் பிரிவுக்கு திட்ட மற்றும் கட்டிட அனுமதிக்காக, கடலூர் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்த சேதுபாரதி - பிரீத்தி என்ற தம்பதி, கடலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு, போலியாக அரசு முத்திரை மற்றும் போலி எண் இட்டு மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

மேலும், கடலூர் இருசப்பன் தெருவில் வசிக்கும் ஒருவருக்கும் இதேபோல் கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சியில் உள்ள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில், ஆனைக்குப்பத்தை சேர்ந்த அந்த தம்பதி மோசடியாக கட்டிட அனுமதி வரைபடம் தயார் செய்து வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் சொரக்கல்பட்டு ஸ்ரீரங்க மேஸ்திரி தெருவில் ஒரு பெண்ணுக்கும் போலி கையெழுத்திட்டு கட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அந்த தம்பதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக பல்வேறு நபர்களுக்கு கட்டிட திட்ட அனுமதி மற்றும் ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு அளித்து, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் திருப்பாதிரிப்புலியூர் அருண் நகரில் வசிக்கும் ஒருவருக்கு, போலி முத்திரை மற்றும் மாநகராட்சி ஆணையாளரின் போலி கையொப்பமிட்டு திட்ட மற்றும் கட்டிட அனுமதி அளித்துள்ளார். இதனால் அரசுக்கும், மாநகராட்சிக்கும் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தம்பதி மற்றும் புதுச்சேரி பெண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக இது நடைபெற்று, 5 ஆயிரம் பேரிடம் இந்த மோசடி நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆணையர் விளக்கம்: இதுகுறித்து கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறியதாவது: கடலூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி அரசு முத்திரை என அனைத்தையும் போலியாக பயன்படுத்தி தனிப்பட்ட நபர்கள் அதிகம் நபர்களுக்கு கட்டிட அனுமதி மற்றும் வங்கிகளின் கடன் பெறுவதற்கான ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளது விசாரணை நடத்தியதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. யார், யார் மாநகராட்சியின் அனுமதியை பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள் என்பது குறித்த வங்கிகளில் கேட்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வந்தவுடன் எவ்வளவு நபர்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் கட்டிட உரிமம் பெறுவதற்கு தனிப்பட்ட நபர்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்ப வேண்டாம். மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தந்து எளிமையான முறையில் கட்டிட உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x