Published : 06 Sep 2023 08:56 PM
Last Updated : 06 Sep 2023 08:56 PM
சேலம்: சேலம் அருகே சங்ககிரியில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்கு பதிந்து, ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் - மருமகன் பிரச்சினைக்கு தீர்வு காண சென்ற பெற்றோர்: சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை (28). இவர் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தற்காலிக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறைச் சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25) என்பவருக்கும் திருமணமாகி சஞ்சனா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.
ராஜதுரைக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ராஜதுரை தனது மாமனார் பழனிசாமி (50), மாமியார் பாப்பாத்தி (47) ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பழனிசாமி, பாப்பாத்தி ஆகியோர் தனது உறவினர்களான ஆறுமுகம் (49), இவரது மனைவி மஞ்சுளா (42), செல்வராஜ் (55), விக்னேஷ் (35) ஆகியோருடன் ஆம்னி வேனில் பெருந்துறையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டிக்கு வந்து தம்பதியரிடையே பேச்சுவார்த்தை நடத்தி மகள், மருமகனை சமாதானம் செய்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு: சேலத்தில் இருந்து மகள் பிரியா, பேத்தி சஞ்சனாவை சில நாட்கள் தங்களுடன் இருப்பதற்காக அழைத்துக் கொண்டு பழனிசாமி, பாப்பாத்தி உள்பட 8 பேரும் சேலத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு ஆம்னி வேனில் புறப்பட்டு பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டிச் சென்றார். அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னி வேன் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்டனுார் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின் பக்கத்தில் ஆம்னி வேன் மோதியது. இந்த கோர விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், சஞ்சனா ஆறு பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்: விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் ஆம்னி வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் பிரியாவை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ், பிரியா இருவருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிரிழந்த 6 பேரின் உடலை போலீஸார் கைப்பற்றி, சங்ககிரி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த ஆட்சியர் கார்மேகம், சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து எவ்வாறு நேரிட்டது, விபத்துக்கான காரணம் குறித்து ஆட்சியர் கார்மேகம் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விபத்து நடந்த சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. வீடியோ காட்சியை ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார். விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர் ஆறுதல் அளித்தார்.
சேலம் எஸ்பி விபத்து குறித்து விசாரணை: சேலம் எஸ்பி அருண் கபிலன் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி ராஜா, வட்டாட்சியர் அறிவுடை நம்பி சம்பவ இடம் சென்று விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்காது என்பதால் ஓட்டுனர் விக்னேஷ் அதிவேகத்தில் ஆம்னி வேனை ஓட்டி இருக்கலாம் என்றும், சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலையில் மழை நீர் ஈரப்பதத்தால் உடனடியாக பிரேக் பிடித்து இருக்காததால் விபத்து நடந்து இருக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும், குளிர்ந்த காற்று வீசியதால், ஓட்டுனர் விக்னேஷ் கண் அயர்ந்து, லாரி மீது மோதி இருக்க கூடும் என பல்வேறு கோணங்களில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.
தப்பிய லாரி ஓட்டுனரை போலீஸ் பிடித்து கைது: விபத்துக்கு காரணமான லாரியை சம்பவ இடத்தில் இருந்து ஓட்டுனர் எடுத்து சென்று விட்டார். விபத்து குறித்து சங்ககிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி மற்றம் ஓட்டுனரை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடுதலில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி கோவை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, போலீஸார் மடக்கி பிடித்தனர். போலீஸார் விசாரணையில், லாரி ஓட்டுனர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கவுதம்பாபு (25) என்பது தெரியவந்தது. அவரை சங்ககிரி போலீஸார் கைது செய்து, விபத்து குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT