Published : 06 Sep 2023 09:32 AM
Last Updated : 06 Sep 2023 09:32 AM
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரபியுல் இஸ்லாம். கடந்த ஜூலை 16-ம் தேதி இரவு இவரின் வீட்டுக்குள் திடீரென நுழைந்த காவல் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, ரபியுல் இஸ்லாமிடம் போதைமருந்து மற்றும் முறைகேடான பணப்பரிவர்த்தனை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடித்து உதைத்த பிறகு அவரையும் அவரது உறவினர் இருவரையும் பபனிபூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களை பல மணி நேரம் சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர், எஸ்பி வீட்டுக்கு அழைத்து சென்று அங்கும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் பிறகு, ரபியுல் இஸ்லாமிடம் காவல் துறை அதிகாரிகள் ரூ.2.5 கோடி கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். பணத்தை கொடுக்கவில்லையெனில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி என்கவுன்டரில் சுட்டுக் கொன்று விடுவதாகவும் காவல் துறை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தொழிலதிபர் ரபியுல் இஸ்லாம் அளித்த புகாரையடுத்து, அசாம் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் (சிஐடி), 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சித்தார்த்த புராகோனை கைது செய்தனர். இவர் பஜாலி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்தார்.
இவரைத் தவிர டிஎஸ்பி புஷ்கல் கோகோய், ஏடிஎஸ்பி காயத்ரி சோனோவால், அவரது கணவர் சுபாஷ் சந்தர், எஸ்.ஐ. தெபஜித் கிரி, காவலர்கள் இன்ஜமாமுல் ஹசன்,கிசோர் பருவா, நபீர் அகமது மற்றும் தீப்ஜாய் கலிதா ஆகிய 9 பேரை கைது செய்த சிஐடி அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரியே தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment