Last Updated : 24 Aug, 2023 08:23 PM

 

Published : 24 Aug 2023 08:23 PM
Last Updated : 24 Aug 2023 08:23 PM

கிருஷ்ணகிரியில் பறக்கும் படை வட்டாட்சியர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி கண்காணித்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், அவருக்கு உதவிய வாகன ஓட்டுநர் சுப்பிரமணி.  

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில்(ஜீப்) ஜிபிஎஸ் கருவியை பொருத்திய ஓட்டுநர் மற்றும் அரிசி கடத்தல்காரர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை வட்டாசியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ. இவரது அரசு வாகன (ஜீப்) ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த பி.சி.புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(59). இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஆட்சியரின் ஓட்டுநராக பணியாற்றி, அங்கிருந்து பணி மாறுதல் செய்யபட்டு பறக்கும்படை வட்டாட்சியர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அரிசி கடத்திச் செல்லும் வாகனங்களை பிடிக்க பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ரோந்து செல்லும்போது, தொடர்ந்து சில வாகனங்கள் பிடிப்படாமல் இருந்துள்ளது. இதனிடையே வட்டாட்சியர் இளங்கோ தனது வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் புகார் தெரிவித்தார். அவர் உரிய விசாரணை நடத்திட எஸ்பி-க்கு பரிந்துரை செய்தார்.

இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ் கருவி சிக்னல்கள் அனைத்தும், அரிசி கடத்தலில் ஈடுபட்டு வரும் குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரம் அருகே உள்ள நடுசாலை கிராமத்தை சேர்ந்த தேவராஜ்(33) என்பவரது செல்போன் எண்ணிற்கு சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக தேவராஜிடம் போலீஸார் நடத்தி விசாரணையில், ஓட்டுநர் சுப்பிரமணியின் மூலம் ஜிபிஎஸ் கருவியை, பறக்கும்படை வட்டாட்சியர் வாகனத்தில் பொருத்தியதும், இதன்மூலம், வட்டாட்சியரின் வாகனம் எங்கு ரோந்து பணியில் உள்ளது என்பதை அறிந்து, மாற்று வழியில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டுநர் சுப்பிரமணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அரிசி கடத்தல்காரர் தேவராஜ், ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x