Published : 24 Aug 2023 07:21 AM
Last Updated : 24 Aug 2023 07:21 AM
சேலம்: சேலத்தில் கடன் பிரச்சினை காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர், தனது தந்தை, மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிவராமன்(85). பெங்களூரு விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வசந்தா(75). இவர்களது மகன் திலக்(38), இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.
கரோனாவுக்குப் பின்னர் வீட்டில் இருந்தபடியே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார் திலக். இவரது மனைவி மகேஷ்வரி(33), மகன் சாய்கிரிஷ்சாந்த்(6). குழந்தை சாய்கிரிசாந்த்துக்கு வாய் பேச முடியாது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு வாட்ஸ்-அப் மூலம் திலக் அனுப்பிய தகவலில், குழந்தையை குணப்படுத்த முடியாததாலும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்துரு அளித்த தகவலின்பேரில், கன்னங்குறிச்சி போலீஸார் அங்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிஷ்சாந்த் மற்றும் திலக் ஆகியோர் இறந்துகிடந்தனர். வசந்தா மயங்கிய நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீஸார், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற நால்வரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ செலவுக்காக...: வீட்டில் இருந்த கடிதத்தில், ‘கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "குழந்தை வாய் பேச முடியாமல் இருந்ததால், மருத்துவச் செலவுக்காக திலக் அதிக கடன் வாங்கியுள்ளனர். மேலும், கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதில் நஷ்டமடைந்துள்ளார்.
கடன் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு உள்ளான திலக், தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய்கிரிஷ்சாந்த்துக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT