Published : 14 Aug 2023 07:03 AM
Last Updated : 14 Aug 2023 07:03 AM

கிழக்கு தாம்பரம் பகுதியில் இயங்கிவரும் காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுவர்கள் திடீர் மாயம்

தாம்பரம்: தாம்பரம் அருகே சிறுவர் காப்பகத்தில் தங்கி இருந்து 2 சிறுவர்கள் திடீரென மாயமாகினர். சகோதரர்களான இருவரும் கடத்தப்பட்டனரா அல்லது தப்பி ஓடிவிட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கிழக்கு தாம்பரம், பிரபஷர் காலனியில் எஸ்.ஓ.எஸ் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், ரங்கசாமி குளம் பகுதியில், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சகோதரர்கள் குமரன் (10), ஏழுமலை (8) ஆகியோரை சமூக பாதுகாப்பு துறையினர் மீட்டனர்.

பின்னர் இருவரையும் தாம்பரத்தில் உள்ள இந்த காப்பகத்தில் ஒப்படைத்தனர். காப்பகத்தில் தங்கியிருந்த குமரன், பல்லாவரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், ஏழுமலை கிழக்கு தாம்பரம் வினோபா நகரில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிறுவர்கள் இருவரும், காப்பகத்தின் வெளியில் நின்றபடி பல் துலக்கிக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென அவர்களை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால், காப்பகத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுவர்கள் மாயமானார்களா அல்லது கடத்தப்பட்டர்களா அல்லது காப்பகத்தில் மற்ற சிறுவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தப்பினர்களா என்ற கோணத்தில் விசாரித்து தீவிரமாக சிறுவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து சமூக நலத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x