Published : 13 Aug 2023 04:07 AM
Last Updated : 13 Aug 2023 04:07 AM

வழிப்பறியில் ஈடுபட்ட சிறார்கள் உட்பட 7 பேர் கோவையில் கைது

கோவை: கோவை பீளமேடு காந்திமா நகரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள ராஜிவ் காந்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுவன் உட்பட 4 பேர் இவரது வாகனத்தை வழி மறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்து மகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், சரவணம் பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், வழிப் பறியில் ஈடுபட்டவர்கள் சங்கனூர் பிரதான சாலையைச் சேர்ந்த கவுதம் (21), கணபதி காமராஜ புரத்தைச் சேர்ந்த அருள் குமரன் (19), நாகராஜ், 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. இதையடுத்து கவுதம், அருள் குமரன், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவான நாகராஜை தேடி வருகின்றனர். அதேபோல், கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் குமார் (32). தனியார் வங்கி ஊழியர். இவர் நேற்று முன்தினம் சங்கனூர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 சிறுவர்கள் இவரது வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி, அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.

புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் வழிப் பறியில் ஈடுபட்டவர்கள் கணபதி, காமராஜ புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் எனத் தெரிந்தது. இதையடுத்து நால்வரையும் போலீஸார் கைது செய்து, கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x