Published : 13 Aug 2023 01:33 AM
Last Updated : 13 Aug 2023 01:33 AM
தருமபுரி: பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்திய இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் காவல் நிலைய போலீஸார் நாகர்கூடல்-பண்டஅள்ளி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் பேச்சும், நடவடிக்கையும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சோதனையிட்டபோது அதில் சந்தன மரத்துண்டுகள் 13 எண்ணிக்கை அளவில் இருப்பது தெரிய வந்தது.
எனவே, அவர்கள் இருவரையும் போலீஸார் தருமபுரி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சொரக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்(53), பென்னாகரம் வட்டம் சின்னகாம்பட்டியைச் சேர்ந்த சரவணன்(40) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் உள்ள பட்டா நிலம் ஒன்றில் இருந்த சந்தன மரத்தை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்ததும், அந்த மரம் போதிய விளைச்சலை அடைந்த நிலையில் அதை வெட்டி சிறு துண்டுகளாக்கி கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
எனவே, இருவரையும் கைது செய்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன்பு நேற்று (ஆகஸ்ட் 12) ஆஜர்படுத்தி, தலா ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலித்த பின்னர் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரத் துண்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் அரசுடமையாக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கூறும்போது, ‘சந்தன மரங்களை வனப்பகுதி, பட்டா நிலங்கள் என எங்கிருந்து வெட்டி கடத்தினாலும் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தெரிய வந்தால் 18004254586 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT