Published : 12 Aug 2023 07:49 AM
Last Updated : 12 Aug 2023 07:49 AM
மதுரை: உண்டியல் கொள்ளையை தடுத்ததால் கோயில் இரவுக் காவலர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திருச்சி இளைஞரை, 8 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டவர் மதுரை பாஜக பிரமுகரின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் கல்லாணை(60). இவர், நான்கு வழிச் சாலையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு இரவுப் பணியில் இருந்தபோது, உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கல்லாணையைக் கொன்றுவிட்டு, உண்டியலில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
தடயங்களைக் கொண்டு விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் நகர் காவல் நிலைய எல்லையில் 2016-ல் திருட்டு வழக்கில் சிக்கி, மதுரை சிறையில் இருக்கும் திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரைச் சேர்ந்த அமரேசன் மகன் நிர்மல் (30) என்பவர், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, நிர்மலை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். செலவுக்குப் பணமின்றி வராகி அம்மன் கோயில் உண்டியலை உடைக்க முயன்றபோது கல்லாணை தடுத்ததால், அவரைக் கட்டையால் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸாரிடம் நிர்மல் தெரிவித்தார். பின்னர் அவரைக் கைது செய்த போலீஸார், இதற்கான ஆவணங்களை சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
கொலை செய்யப்பட்ட கல்லாணை, மதுரை மாநகர பாஜக தலைவர் மகா.சுசீந்திரனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT