Published : 11 Aug 2023 04:03 AM
Last Updated : 11 Aug 2023 04:03 AM
திருப்பூர்: சலவைத் தொழிலாளியின் வீட்டை இரவோடு, இரவாக இடித்து அகற்றிய விவகாரத்தில், காங்கயம் முன்னாள் எம்எல்ஏ, நகராட்சி தலைவர் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கயம் ஆலாம்பாடி ஊராட்சி நெய்க் காரம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு காளி என்பவருக்கு ஊர் பொது மக்கள் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அவர் இறந்து 14 ஆண்டுகளுக்கு பின்பு, அவரது தம்பி மகனும் சலவைத் தொழிலாளியுமான சிவா (60) என்பவர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.
சிவாவை அங்கு குடியிருக்க வேண்டாம் என, கடந்த 4 மாதங்களாக ஊர் மக்கள் தரப்பில் கூறி வந்துள்ளனர். அந்த ஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக வீடு கட்ட இருப்பதால், வீட்டை காலி செய்யுமாறு சிவாவிடம் கூறவே அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், நகராட்சி தலைவர் சூர்ய பிரகாஷ் மூலமாக வீட்டை காலி செய்ய சிவாவை அதே ஊரை சேர்ந்த காங்கயம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
ஊரை விட்டு காலி செய்தால், ஊருக்கு வெளியே வேறு இடம் தருவதாக ஊரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க சிவா மறுத்துவிட்டார். இதையடுத்து, கடந்த 8-ம் தேதி இரவு சிவா இல்லாத நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டை இடித்து அகற்றினர். வீட்டின் சுவர், ஓடு, கதவு மற்றும் துணிகள் என அனைத்தையும் வெளியே எடுத்து வீசியுள்ளனர். சம்பவ இடத்துக்கு காங்கயம் போலீஸார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பியது.
வீரணம் பாளையத்தில் மகன் வீட்டுக்கு சென்றிருந்த சிவாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காங்கயம் போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ நடராஜ், சூர்ய பிரகாஷ் ஆகியோரின் தூண்டுதலின்பேரில், சுப்பிரமணி உள்ளிட்டோர் வீட்டை இடித்ததாக காங்கயம் போலீஸாரிடம் சிவா புகார் அளித்தார். இதையடுத்து நடராஜ், சூர்ய பிரகாஷ் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் விஜயகுமார் (33) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, சிவாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் திருப்பூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பெ.சாமிநாதன் ஆகியோரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT