Published : 10 Aug 2023 01:20 PM
Last Updated : 10 Aug 2023 01:20 PM

பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்க அழைப்பு: இளைஞர்களை குறி வைக்கும் ‘டார்க் கிரிமினல்கள்’

வேலூர்: செல்போன் செயலி வழியாக பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று இளைஞர்களை குறி வைக்கும் ‘டார்க் கிரிமினல்’களின் மோசடிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் மனிதர்களின் செயல்பாடுகளை இணைய வசதி வேகப்படுத்தியுள்ளது. இணையத்தின் பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தாண்டி எதிர்மறை செயல்பாடுகளையும் வேகப்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். ஒருவரின் தனித்திறன்களை வளர்க்க உதவும் சமூக வலைதளங்கள் இன்று வாசிப்பு பழக்கத்தை மாற்றி கேட்கும் திறனை மட்டும் அதிகப்படுத்தி வருகிறது.

கதைகள், பாடல்கள், கவிதைகள், பாடங்களின் வாசிப்பு திறனை மாற்றி அதை காதால் கேட்டு மனதில் நிலை நிறுத்தும் நிலைக்கு இணையவழி தளங்கள் ஊக்கப்படுத்தி வருகின்றன. கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டெலி கிராம் போன்ற பொதுமக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் தளங்கள் மூலம் குற்றச் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

நாளுக்கு நாள் சமூக வலைதள குற்றங்களின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனை பயன்படுத்தும் வலைதள பயனாளர்கள் நூதன மோசடிகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகவும் இருக்கிறது என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் சமூக வலைதளங்கள் மூலமான பாலியல், மிரட்டல் தொடர்புடைய குற்றங்களை தாண்டி தற்போது தகவல் திருட்டு, மிரட்டல், பண மோசடி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் சமீப நாட்களில் ஆன்லைனில் பகுதி நேர வேலையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல படித்த இளைஞர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் புகார் அளிக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

படிக்காதவர்கள் ஏமாறும் காலம் போய் படித்தவர்களே பல லட்சங்களை இழக்கும் நிலை குறித்து விசாரித்ததில் ‘டார்க் கிரிமினல்’-கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதுவரை நடைபெற்ற சைபர் பண மோசடி குற்றங்களில் ‘டார்க்-கிரிமினல்’ யாரும் சிக்கவில்லை எனபது அதிர்ச்சியான தகவலாக உள்ளது. கம்ப்யூட்டர், இணைய சேவை வசதி இருந்தால் வி.பி.என் தொழில்நுட்பம் மூலம் மோசடி குற்றங்களை அரங்கேற்றி 'டார்க் கிரிமினல்'கள் பணத்தை சுருட்டி வருகின்றனர்.

‘பார்ட் டைம் ஜாப்' ஆசை: இளைஞர்கள் பலர் அதிகம் சம்பாதிக்க தங்களது பொன்னான நேரத்தை அதிகம் செலவழிக்க தயாராக இருக்கின்றனர். இவர்கள்தான் ‘டார்க் கிரிமினல்’களின் இலக்காக மாறுகிறது. வாட்ஸ்-அப் எண்களுக்கு வரும் குறுஞ்செய்திகள்தான் சைபர் மோசடிகளின் முதல்படி. அதை நம்பும் இளைஞர்கள் குறுஞ் செய்தியில் இருக்கும் இணைப்பு வழியாகச் சென்றால் சுலபமான வேலையை கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

அது உண்மையா என்று நம்புவதற்காக முதலில் 1,000 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுக்கு லாபம் அதிகம் கிடைத்ததும் அது லட்சங்களில் முதலீடாக மாறுகிறது. அதன் பிறகுதான் ‘டார்க் கிரிமினல்’களின் வேலை ஆரம்பிக்கிறது. அவர்கள் நமக்கு காட்டும் லாப கணக்கு பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றவே முடியாது என்பதுதான் உண்மை. அந்த பணம் ஏற்கெனவே ‘டார்க் கிரிமினல்’களின் கைகளுக்கு மாறியிருக்கும்.

முடங்கும் வங்கிக் கணக்குகள்: சமீபத்தில் தனியார் கல்லூரி பேராசிரியரின் வங்கிக் கணக்கு பெங்களூரு காவல் துறையால் முடக்கப்பட்டது. அது குறித்து அவர் விசாரித்தபோது ‘டார்க் கிரிமினல்’களிடம் பகுதி நேர வேலை செய்து வரும் அவரது வங்கிக் கணக்கை ‘டார்க் கிரிமினல்’கள் பயன்படுத்தி பெங்களூருவைச் சேர்ந்த நபரின் பணத்தை கை மாற்றியுள்ளனர்.

கணிசமான கமிஷனுக்காக ஆசைப்பட்டு அவரது வங்கிக் கணக்கை ‘டார்க் கிரிமினல்’கள் பயன்படுத்த கல்லூரி பேராசிரியர் அனுமதித்தது தான் காரணமாக இருந்துள்ளது. அதுவும் பெங்களூருவைச் சேர்ந்த 18 பேரின் பணம் பேராசிரியரின் வங்கிக் கணக்கு வழியாக கை மாறி இருக்கிறது. கடைசியில் பேராசிரியரும் டார்க் கிரிமினல்களிடம் பணத்தை இழந்த துடன் அவரது வங்கிக் கணக்கும் கருப்பு பட்டியலில் சேர்ந்துவிட்டது.

மக்களே உஷார்: சைபர் மோசடி குற்றங்கள் குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாக பகுதி நேர வேலை எனக்கூறி டெலிகிராம் செயலி வழியாக பணத்தை இழந்தவர்களின் புகார்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக இருக்கிறது. யாருமே பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு உங்கள் பணத்தை இழக்க வேண்டாம். மோசடியில் ஈடுபடும் ‘டார்க் கிரிமினல்’களை கண்டுபிடிப்பதில் சவால்கள் நிறைய உள்ளன. அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் பயன்பாடு பல மாநிலங்களில் தென்படுகிறது.

உதாரணமாக வேலூரில் ஏமாற்றப் படும் பணம் 4 அல்லது 5 மாநில வங்கிக் கணக்குகள் வழியாக கைமாறுகிறது. பணம் எடுக்கப்பட்ட கடைசி வங்கிக் கணக்கை கருப்பு பட்டியலில் கொண்டு வந்தால் அது டார்க் கிரிமினல்களிடம் ஏமாந்த ஒரு நபரின் கணக்காக இருக்கிறது. அந்த கணக்கிற்கு வரும் சில லட்சங்கள் பணத்தை மீட்க பல மாநில காவல் துறையினர் காத்திருக்கின்றனர். அதிகம் சம்பாதிக்கலாம் என்று யார் கூறினாலும் நம்ப வேண்டாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x