Published : 08 Aug 2023 04:03 AM
Last Updated : 08 Aug 2023 04:03 AM
உதகை: சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 தம்பதிகள், கடந்த 2014-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பெண் குழந்தைகள் இருவர், அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது 2 குழந்தைகளுக்கும், தலைமையாசிரியரான அப்பு சாமி (55) பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது வகுப்பு ஆசிரியையிடம் இது குறித்து கூறியுள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் பள்ளிக்கு குழந்தை நலப் பாதுகாப்பு குழுவினர் நேரில் சென்று, சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடந்தது உறுதியானதால், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் யமுனா தேவி தலைமையிலான போலீஸார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். அப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன்பின், பிணையில் அவர் வெளியே வந்துவிட்டார். உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி பிரபாகர் ஆஜராகினார். இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அப்புசாமி அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT