Published : 01 Aug 2023 11:04 AM
Last Updated : 01 Aug 2023 11:04 AM

சென்னை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: தடயவியல் நிபுணர்கள் சோதனை

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்ததுடன், தப்பி ஓடிய இரண்டு ரவுடிகள் குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் இன்று அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

என்கவுன்ட்டர் - நடந்தது என்ன?: மண்ணிவாக்கம் ரமேஷ், ஓட்டேரி சோட்டா வினோத் ஆகிய இருவர் தான் இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள். இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஓட்டேரி, வண்டலூர், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவர்கள் தங்களின் சகாக்களுடன் இன்று அதிகாலை ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கூடுவாஞ்சேரி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் கீரப்பாக்கம்- காரணை புதுச்சேரி பிரதான சாலையில் வாகன சோதனையைில் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸார் அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்று போலீஸ் வாகனத்தின் மீது மோதி நின்றது. பின்னர் காரில் இருந்து இறங்கியவர்கள் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை ரவுடிகள் வெட்டியுள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.

பின்னர் தப்பியோடிய ரவுடிகளை துரத்திச் சென்ற போலீஸார் சுட்டதில் இரண்டு ரவுடிகளும் உயிரிழந்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடயவியல் நிபுணர்கள் சோதனை: இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு தடய்ங்களை சேகரித்தனர். வாகனச் சோதனையின்போது உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியதாலேயே என்கவுன்ட்டர் நடத்தியதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x