Published : 30 Jul 2023 12:09 PM
Last Updated : 30 Jul 2023 12:09 PM

திருப்பூர் | கடை உரிமையாளரை மிரட்டி ரூ.16 லட்சம் பறிப்பு: கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

திருப்பூரில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட கடை மற்றும் காரில் சோதனை செய்யும் போலீஸார்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை உரிமையாளரை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏராளமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புது மார்க்கெட் வீதி, காமாட்சி அம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் பல்வேறு கடைகளை வைத்துள்ளனர். இதில் ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களான குக்கர் மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்க 7 பேர் வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென அந்தக் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி ஹஜ்மத் சிங்கை மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். தொடர்ந்து அவரை மிரட்டிய அந்தக் கும்பல் கடையில் வைத்திருந்த ரூ.16 லட்சம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை பறித்துவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி ஓடியது. இந்த சம்பவம் குறித்து ஹஜ்மத் சிங் திருப்பூர் தெற்கு போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பந்தப்பட்ட கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கிடையே கொள்ளை கும்பல் பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த போலீஸார் தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு சென்ற தடயவியல் நிபுணர்கள் காரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபோல் காரின் பதிவினை கொண்டு கார் உரிமையாளர் சக்திவேல் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில், காரை நிறுத்திவிட்டு கொள்ளை கும்பல் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஒருவர் ஒருவராக பணப்பையுடன் தப்பிச் செல்கின்ற காட்சி வித்யாலயம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப்படை விரைந்துள்ளனர். கார் உரிமையாளரான சக்திவேலிடம், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பொய்யான தகவலை கூறி காரை பெற்று வந்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், போலீஸார் இது குறித்து தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் எப்போதும் பரபரப்பாக பொதுமக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் காமாட்சி அம்மன் கோயில் வீதியில், நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x