Published : 25 Jul 2023 06:29 AM
Last Updated : 25 Jul 2023 06:29 AM
காஞ்சிபுரம்: காஞ்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், சுரேஷ். இவர்கள் `டே பை டே' எனும் நிதி நிறுவனத்தை தொடங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்தனர்.
இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் நாள்தோறும் ரூ.1,500 வீதம் பணம் அளிக்கப்படும் எனவும், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் முகவர்களுக்கு நாள்தோறும் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு 2 கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் அறிவித்தனர். இதனை நம்பி 500-க்கும் மேற்பட்டோர் ரூ.24 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் சுமார் 6 மாதம் முறையாக பணம் கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் முறையான பதில் தெரிவிக்காமல் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலத்தையே காலி செய்துவிட்டு இயக்குநர்கள் தலைமறைவாயினர். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், நிதி நிறுவன இயக்குநர்களான வாசுதேவன், சுரேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் வாசுதேவன் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருப்பதாகவும், சுரேஷ் தனது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்துக்கு வந்திருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT