Published : 21 Jul 2023 02:33 AM
Last Updated : 21 Jul 2023 02:33 AM
தருமபுரி: தருமபுரியில் ரூ.600 லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு கைதான நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பூபாலன். தருமபுரி அடுத்த அன்னசாகரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பூபாலன், வெள்ளிச்சந்தை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிலம் அன்னசாகரம் பகுதியில் அருகருகே உள்ளது. வங்கிக் கடன் பெற்று அந்த நிலத்தில் வீடு கட்ட திட்டமிட்ட பூபாலன், வங்கித் தேவைக்காக தன் நிலத்தின் புலப்பட நகல் மற்றும் சித்தப்பா முருகேசன் என்பவரின் பெயரில் உள்ள நிலத்தின் புலப்பட நகல் ஆகியவற்றை வழங்கக் கோரி கடந்த 2010-ம் ஆண்டில் தருமபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணியம் என்பவரை அணுகியுள்ளார்.
ஒரு புலப்பட நகலுக்கு ரூ.300 வீதம் ரூ.600 லஞ்சம் தர வேண்டும் என சர்வேயர் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பூபாலன் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். போலீஸாரின் வழிகாட்டுதல்படி கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நில அளவையர் சுப்பிரமணியத்துக்கு பூபாலன் ரூ.600-ஐ லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சர்வேயர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று (ஜூலை 20) தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT