Published : 18 Jul 2023 06:29 AM
Last Updated : 18 Jul 2023 06:29 AM

தாழம்பூர் | மனைவி, குழந்தையை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி

தாழம்பூர்: சென்னை அருகே மனைவி, குழந்தையைக் கொன்றுவிட்டு, ஐ.டி. ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த் (32). இவர் ஐ.டி. படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுஜிதா (32), மகள் ஐஸ்வர்யா (7). குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் தன்னுடைய வேலையை சுஜிதா ராஜீனாமா செய்துவிட்டார்.

இந்நிலையில் நாவலூரை அடுத்துள்ள தாழம்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி மூவரும் அங்கே குடியேறினர். அரவிந்த் ஒருவரின் மாத ஊதியத்தில் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடன் பிரச்சினையில் தவித்த அரவிந்த் கடந்த இரண்டு மாதமாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தாழம்பூர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் பேசிய அரவிந்த் தான் தன்னுடைய மனைவி சுஜிதா, மகள் ஐஸ்வர்யா ஆகியோரை கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்ய மாத்திரை போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் கமல தியாகராஜன், கோபி ஆகியோர் அரவிந்த் கூறிய முகவரிக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டினுள் அரவிந்த் சேரில் அமர்ந்தபடி இருந்தார். படுக்கை அறையில் சுஜிதா, ஐஸ்வர்யாஇறந்த நிலையில் இருந்துள்ளனர்.

போலீஸார் விசாரணையில், தனக்கு ஏராளமான கடன் இருந்ததாகவும் அதனால் அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதில் மனைவியும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் அரவிந்த் மட்டும் பிழைத்துள்ளார். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் அவரைமீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்டு கிடந்த சுஜிதா(32), ஐஸ்வர்யா (7) உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுஜிதாவின் தந்தை பண்ருட்டி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன் பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x