Published : 14 Jul 2023 06:18 AM
Last Updated : 14 Jul 2023 06:18 AM

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதுர்வேதி சாமியார்: ஜூலை 31-ல் ஆஜராக உத்தரவு

சென்னை: மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சதுர்வேதி சாமியார், ஜூலை 31-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சாமியார் வேங்கட சரவணன் என்ற பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி. இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை மயக்கி கடத்தியதாகவும், நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல்வேறு பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சதுர்வேதி மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற அவர், பின்னர் தலைமறைவானார். இந்நிலையில், ஒரு வழக்கில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தொழிலபதிபரின் மனைவி, மகளை கடத்திய வழக்கிலும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதையேற்ற நீதிமன்றம், சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த வழக்கில் ஜூலை 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு சதுர்வேதி நேரில் ஆஜராக வேண்டும் என முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x