Published : 11 Jul 2023 08:00 AM
Last Updated : 11 Jul 2023 08:00 AM

புறநகர் மின்சார ரயில்களில் அதிகரிக்கும் செல்போன் பறிப்பு

சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, உங்கள் குரல் சேவையில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழின் உங்கள் குரல் சேவையைத் தொடர்பு கொண்டு அம்பத்தூரை சேர்ந்த வாசகர் சங்கர நாராயணன் கூறியதாவது: சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார ரயில்களில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்களில் அண்மைக்காலமாக செல்போன் பறிப்புச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நடைமேடைகளில் இருந்தவாறு பறிப்பதும், ரயில்களுக்குள் ஏறி பறித்துக் கொண்டு ஓடுவதுமாக தொடர்ந்து நடக்கிறது.

இதைத் தடுக்க ரயில் நிலையங்களில் போதிய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுவதில்லை. இதனால், இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் பெட்டியில், ஆண்கள் அத்துமீறி ஏறி பயணம் செய்கின்றனர். அந்த சமயங்களில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எனவே, ரயில்களில் போதிய காவலர்களை ஈடுபடுத்தி பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.மேலும், 2-ம் வகுப்பு டிக்கெட் எடுத்த பயணிகள் முதல் வகுப்பு பெட்டிகளில் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இதை கண் காணிக்கவும் யாரும் இல்லை. இதனால் முதல் வகுப்பு டிக்கெட் எடுப்பவர்களுக்கு அமருவதற்கு இருக்கைகள் கிடைப்பதில்லை.

காலை, மாலை வேளைகளில் முதல் வகுப்பு பெட்டிகளில் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட வேண்டி உள்ளது. முதல் வகுப்பு டிக்கெட் எடுப்பதால் பண விரயத்தைத் தவிர ஒருபலனும் இல்லை. இவற்றை தடுக்க ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓடும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் சோதனை செய்தபோது அதில் பயணம் செய்த டிக்கெட் எடுக்காத ஒரு பயணி பரிசோத கரைக் கண்டு பயந்து ரயில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதனால், பாதுகாப்பு கருதி ஓடும் ரயிலில் சோதனை நடத்துவதில்லை. மாறாக, நடைமேடைகளில் ரயில் வந்து நின்றதும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது, 2-ம் வகுப்பு டிக்கெட்டு எடுத்து முதல் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளை பிடித்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போதிய காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x