Published : 11 Jul 2023 06:27 AM
Last Updated : 11 Jul 2023 06:27 AM

செங்கல்பட்டு பாமக நகர செயலர் கொலையில் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

கொல்லப்பட்ட நாகராஜ்

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக நகரச் செயலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு பாமக நகரச் செயலர் நாகராஜ். இவர் பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் செல்வதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கூலிப்படை கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

அங்கிருந்தவர்கள் நாகராஜை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜ் உயிரிழந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையிலான பாமகவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு கூடி, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் பரத் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: கொலை சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது குற்றவாளிகள் பரனூர் வழியாக தப்பிச் செல்வதாக தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். புளியம்பாக்கம் ரயில்வே பாதை அருகே சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் நடந்து செல்வது தெரியவந்தது.

போலீஸார் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் திருப்பி தாக்க தொடங்கினார். இதையடுத்து, போலீஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது நிலைகுலைந்து விழுந்த அவரை பிடித்து விசாரித்ததில், அவர் செங்கல்பட்டு சின்னநத்தம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பதும், நாகராஜ் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

2 பேர் சிக்கினர்: நாகராஜ் கொலையில் செங்கல்பட்டு கே.கே.தெருவைச் சேர்ந்த சூர்யா, அன்வர், கே.டி.மணி, காவூர் விஜி, கார்த்தி மற்றும் அஜய் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அஜய்யை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர். படாளம் அருகே கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். முக்கிய நபரான சூர்யா மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கொலைக்கான காரணம்: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகராஜின் 17 வயது மகளை சூர்யா திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தனது மகளை நாகராஜ் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாமக நகர செயலர் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து செங்கல்பட்டு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே தற்போது கொலை செய்யப்பட்ட பூக்கடை நாகராஜ் மற்றும் ஏற்கெனவே கொல்லப்பட்ட அனுமந்தபுரம் தர்காஸ் பகுதியை சார்ந்த மனோகர், காட்டூர் காளிதாஸ் ஆகிய 3 பேரின் கொலைகளைக் கண்டித்து பாமக சார்பில் இன்று (ஜூலை 11)காலை 10 மணி அளவில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x