Published : 10 Jul 2023 09:21 AM
Last Updated : 10 Jul 2023 09:21 AM
திருப்பூர்: காங்கயம் அருகே அரசுப் பேருந்து - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
காங்கயம் அடுத்த முத்தூர் வரட்டுகரை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (35). திருமணமாகாத இவர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வந்தார். இவருடைய உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சூர்யா (21). திருமணமாகாத இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா 2 பேரும் நேற்று காங்கயம் அருகே படியூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு 2 பேரும் இருசக்கர வாகனத்தில் காங்கயம் நோக்கி திருப்பூர் சாலை வழியாக வந்தனர்.மோட்டார் சைக்கிளை சத்தியமூர்த்தி ஓட்டி வந்தார். சூர்யா பின்னால் அமர்ந்து வந்தார்.
அப்போது இரவு சுமார் 7.45 மணியளவில் காங்கயம் - திருப்பூர் சாலை, கரட்டுப்பாளையம் பிரிவு அருகே காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற ஒரு அரசு டவுன் பஸ்ஸை , மற்றொரு அரசு டவுன் பஸ் முந்திச் செல்ல முயன்ற பஸ்ஸும், சத்தியமூர்த்தி, சூர்யா சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கயம் அருகே அரசு பஸ் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட ,2 பேர் உயிரிழந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT