Published : 08 Jul 2023 07:28 AM
Last Updated : 08 Jul 2023 07:28 AM

செங்கை நீதிமன்றம் அருகே நடந்த கொலை தொடர்பாக 7 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம்: தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (31). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் கொலை, அடிதடி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இரும்புலியூரில் பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக லோகேஷ் உள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக நேற்று முன்தினம் லோகேஷ் நீதிமன்ற விசாரணைக்கு வந்தார். விசாரணைக்கு முன்பு நீதிமன்ற வளாகம் அருகே உள்ள டீக்கடை பகுதிக்கு வந்தபோது திடீரென அங்கு 3 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் தப்பித்து ஓடிய லோகேஷை அந்த கும்பல் விரட்டி பிடித்து வெட்டிவிட்டு தப்பியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் பரத் தலைமையிலான போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லோகேஷை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து 7 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நடுவர் கமலா முன்னிலையில் தாம்பரத்தைச் சேர்ந்த ராகுல் (22), தனசேகரன் (23), லோகேஷ் (21), அரவிந்த்குமார் (24), ரூபேஷ் (22), பிரபின்குமார் (23) மண்ணிவாக்கம் சாம்சன் மோசஸ் (24) ஆகியோர் சரணடைந்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டதன் பேரில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x