Published : 07 Jul 2023 04:44 PM
Last Updated : 07 Jul 2023 04:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை கடந்த 9 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்தியதாக தம்பதி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மனைவி சோனியா. இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சோனியா விளையாட்டுப் பொருள்களை விற்று வருகிறார். இதற்கிடையே கடந்த 27-ம் தேதி இரவு சோனியா மிஷன் வீதியில் உள்ள தனியார் பூச் செண்டு விற்பனை செய்யும் கடையின் வாசலில் தனது 2 மாத குழந்தை ஆதித்யாவுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சோனியா இதுகுறித்து பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குழந்தை ஆதித்யாவை தம்பதி தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடினர். இதில் குழந்தையைக் கடத்தியது கர்நாடக மாநிலம் பெங்களுருவைச் சேர்ந்த புனிதா (31), பசவராஜ் (32) தம்பதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களுர் விரைந்த தனிப்படை போலீஸார் புனிதாவை நேற்று இரவு கைது செய்தனர். அவரிடமிருந்த சோனியாவின் 2 மாத ஆண் குழந்தையையும் மீட்டனர். புனிதாவிடம் நடந்த விசாரணையில், அவருக்குத் திருமணமாகி 7 மாத கர்ப்பிணியான நிலையில், திடீரென கரு கலைந்ததாகவும், அதை கணவர் ஒத்துழைப்புடன் மாமனார் வீட்டாரிடம் மறைத்த நிலையில், குழந்தை பெற்றதாக அவர்களை நம்பவைக்க புதுச்சேரி வந்து கணவர், சகோதரர் உதவியுடன் சோனியாவின் 2 மாத ஆண் குழந்தையைக் கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து புனிதாவின் கணவர் பசவராஜ் (32), புனிதாவின் சகோதரரான ராஜ்கணேஷ் (30) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து மூவரையும் புதுச்சேரி அழைத்து வந்த போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட குழந்தையை தாய் சோனியாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT