Published : 04 Jul 2023 05:55 PM
Last Updated : 04 Jul 2023 05:55 PM
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 50 வயது நபர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்த ஆட்டைப் பலிகொடுத்தார். பின்னர் அவர் அந்த ஆட்டிறைச்சியை சமைத்து அதன் கண்ணை உண்டபோது அந்தக் கண் தொண்டையில் சிக்கி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தின் மதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பகர் சாய். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தனது கிராமத்து மக்களுடன் கோபா தம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார்.
அங்கே நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஆட்டை அவர் பலி கொடுத்தார். அனைவருக்குமாக வெகு விமரிசையாக விருந்து சமைத்து முடிக்கப்பட்டது. பின்னர் அந்த உணவில் இருந்து ஆட்டின் கண்ணை எடுத்து அதை அப்படியே விழுங்க முயன்றார் பகர் சாய். ஆனால், அந்தக் கண் அவர் தொண்டையில் சிக்கிக் கொண்டது. மூச்சுவிடவே சிரமப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆட்டைப் பலிகொடுத்த நபரின் உயிர் ஆட்டின் கண்களால் பறிபோன சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகர் சாய் மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT