Published : 02 Jul 2023 04:03 AM
Last Updated : 02 Jul 2023 04:03 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு அருகே திருச்சி- திண்டுக்கல் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விஜயகுமார், அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினார். அப்போது, காரில் வந்தவர்களில் ஒருவர் இறங்கி தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து, அந்த காரை காவலர் விஜயகுமார் சோதனையிட்டபோது, அதில் சாக்கு மூட்டையில் ரத்த காயங்களுடன் ஓர் ஆண் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் ராம்ஜி நகர் மற்றும் சோமரசம் பேட்டை போலீஸார் அங்கு சென்று, காரில் இருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் தெரியவருவதாவது: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன்வேலி 16-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (40), வெங்காய வியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி (36). சிவலிங்கம் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த தன லட்சுமி, தனது உறவினர்களான கருமண்டபத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (55), அவரது மனைவி சுமதி (42), செந்தில் குமார் (40) ஆகியோருடன் சேர்ந்து, கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பின்னர், அவர்களின் உதவியுடன் நேற்று மது போதையில் வீட்டில் இருந்த சிவலிங்கத்தின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் வீசுவதற்காக காரில் எடுத்துச் சென்றபோது, போலீஸாரிடம் பிடிபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும், காரில் இருந்து இறங்கி தப்பியோடிய செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT