Published : 01 Jul 2023 07:44 PM
Last Updated : 01 Jul 2023 07:44 PM
விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விருதுநகர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இம்மாதம் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த தனது கூட்டாளியான செந்தில் (47) என்பவரை சுட்டு கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்கரட் தலைமையிலான தனிப்படை போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்குப் பிறகு சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.
அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி விருதுநகரில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் கடந்த 23ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதி நடைபெற்றது. அப்போது, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தும் ஜூலை 1ம் தேதி வரிச்சியூர் செல்வத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதித்துறை நடுவர் கவிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, வரிச்சியூர் செல்வத்தை அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அருப்புக்கோட்டை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து சனிக்கிழமை பிற்பகல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வரிச்சியூர் செல்வம் அழைத்துச்செல்லப்பட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பின்னர், விருதுநகரில் உள்ள 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வரிச்சியூர் செல்வம் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, போலீஸ் விசாரணையின்போது தனக்கு உணவு, உடை, இருப்பிட வசதி செய்து கொடுத்ததாகவும், உடல் அளவிலும் மனதளவிலும் போலீஸார் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 5ம் தேதி வரை வரிச்சியூர் செல்வத்தை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் கவிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார். மேலும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைதுசெய்ய சென்னை மற்றும் வட மாநிலங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டுள்ளாதகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT