Published : 01 Jul 2023 12:37 PM
Last Updated : 01 Jul 2023 12:37 PM
மதுரை: விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ - மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைசேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (55), பொன்மேனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலக்கரை வி.தியாகராஜன் (51), நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி (50), கோவில்பட்டி கே.நாராயணசாமி (63),
அருப்புக்கோட்டை எஸ்.மணிவண்ணன் (55), சிவகங்கை குமாரப்பட்டி அசோக் மேத்தா பஞ்சய் (43), தேவகோட்டை ராம் நகர் எம்.சார்லஸ் (50), தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள் (80) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ‘மனுதாரர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்துள்ளனர்.
பத்தாயிரம் புகார்தாரர்கள் உள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்நிலையில், மனுதாரர்கள் சூம் மீட்டிங் நடத்தி யாரும் புகார் அளிக்கக்கூடாது, புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.
மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். யார் யார் பெயரில் சொத்துகள் உள்ளன? எங்கெங்கு சொத்துகள் உள்ளன? பினாமிகள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகிவிடுவர் என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 10 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT