Published : 30 Jun 2023 07:03 AM
Last Updated : 30 Jun 2023 07:03 AM
நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
நாகையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், நாகை அருகே தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி உட்பட 6 இடங்களில் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன.
இந்நிலையில், நாகை தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில், குறைவான கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலரிடம் லஞ்சமாக லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழுவினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது, 190-க்கு 127 மதிப்பெண்களுக்கும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்த 38 மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய மீன்வள பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் நேற்று உத்தரவிட்டது. மேலும், முறைகேடாக கல்லூரியில் சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT