Published : 25 Jun 2023 06:13 AM
Last Updated : 25 Jun 2023 06:13 AM
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நிதி நிறுவன மோசடி புகாரில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி பேரம் பேசி ரூ.10 லட்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன்.
சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து வந்தனர். சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால், இவர்கள் ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்டனர். இதில், எம்.ஆர்.கணேஷ் பாஜகவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்தார்.
இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறைந்த காலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தனர். அதன்படி, கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு பிரசாத் என்பவர் ரூ.2.50 கோடியும், சீனிவாசன் என்பவர் ரூ.38 லட்சமும் முதலீடு செய்திருந்தனர். குறிப்பிட்ட காலத்தில் நிதி நிறுவன உரிமையாளர்கள் பணத்தை திருப்பித் தராததால், அவர்கள் மீது ரகு பிரசாத், சீனிவாசன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 2021-ம் ஆண்டு புகார் அளித்தனர்.
2021-ல் சந்திப்பு: இதுதொடர்பாக விசாரணை நடத்த கோவையில் தங்கியிருந்த கணேஷை சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், பூதலூர் உதவி ஆய்வாளராக இருந்த கண்ணன் ஆகியோர் கடந்த 2021 ஏப்.18-ம் தேதி சந்தித்துள்ளனர். அப்போது, புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூ.6 கோடி கேட்டதாகவும், முதல் தவணையாக ரூ.10 லட்சம் கொடுக்கும்படியும் கணேஷிடம் இருவரும் கூறியுள்ளனர். அப்போது, தஞ்சாவூரில் உள்ள தனது நிறுவனத்தில் பணியாற்றும் பொது மேலாளர் ஸ்ரீகாந்திடம் ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொள்ளும்படி அவர்களிடம் கணேஷ் கூறியுள்ளார்.
அதன்படி, மறுநாள்(ஏப்.19) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சோமசுந்தரத்திடம் ஸ்ரீகாந்த் ரூ.5 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின், ஏப்.29-ம் தேதி மேலும் ரூ.5 லட்சத்தை ஸ்ரீகாந்திடம் இருந்து சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேலும் பலர் அடுத்தடுத்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, நிதி நிறுவன உரிமையாளர்கள் கணேஷ், சுவாமிநாதன், பொது மேலாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரூ.6 கோடி பேரம் பேசி, ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
ஆதாரங்களை திரட்டினர்: இதையடுத்து, இதுதொடர்பான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திரட்டி வந்தனர். இதில், ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, சோமசுந்தரம், கண்ணன் ஆகியோர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரிலும், உதவி ஆய்வாளர் கண்ணன் திருவாரூரிலும் பணியாற்றி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT