Published : 22 Jun 2023 06:01 AM
Last Updated : 22 Jun 2023 06:01 AM
திருவள்ளூர்/சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், அம்பத்தூர் அயப்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தினோம். மேலும்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடே என்னும் இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டோம். அங்குள்ள கின்னெகருவு என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பல மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பிறகு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் ஆந்திர மாநிலகாவல்துறை இணைந்து அந்த மலை கிராமத்தை சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டோம். சுந்தரராவ் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,760 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம். இதையடுத்து அவரை கைது செய்தோம். சுந்தரராவ் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் ஆவார். அவர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம், வெடிபொருள் பயன்படுத்தியது போன்ற முக்கியபிரிவுகளின் கீழ் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விசாரணையில் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை அதிக அளவில் வாங்கி, விற்பனை செய்வதற்காக வீட்டில் அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT