Published : 21 Jun 2023 08:49 AM
Last Updated : 21 Jun 2023 08:49 AM
சென்னை: அயனாவரத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அயனாவரம், குன்னூர் நெடுஞ்சாலை பாளையக்காரர் தெருவில் மாநகராட்சி ஊழியர்கள் அங்குள்ள குப்பையை அகற்றும் பணியில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டி ஒன்றில் பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு கைத்துப்பாக்கி, 7 தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிசிடிவி காட்சிகள்: உடனடியாக அதுகுறித்து அயனாவரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடம் விரைந்து துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை வீசியது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, பெண் ஒருவர் குப்பைத் தொட்டியில் துப்பாக்கியை வீசிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. அந்தக் காட்சியை அடிப்படையாக வைத்து அயனாவரத்தில் வசிக்கும் ஜெனிஷா ஜான்சன் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் துப்பாக்கி, தோட்டாக்களை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதை ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
மன நல பாதிப்பு: இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெனிஷா ஜான்சன் லேசாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளார். இவரது தந்தை மோசஸ் ஜான்சன் மற்றும் தாய் மல்லிகா ஜான்சன் பிரபல டாக்டர்களாக இருந்துள்ளனர்.
தற்போது அவர்கள் உயிருடன் இல்லாததால் ஜெனிஷா பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, நண்பர்கள் சிலரின் உதவியால் இத்தெருவில் உள்ள வீட்டில் தங்கி வந்துள்ளார். வீட்டை சுத்தம் செய்தபோது தன்னிடம் இருந்த பழைய பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்ட நிலையில், பெற்றோரின் பாஸ்போர்ட் மற்றும் துப்பாக்கியையும் அதில் போட்டது தெரியவந்தது'' என்றனர்.
இதையடுத்து, ஜெனிஷா ஜான்சனின் பெற்றோர் எதற்காக துப்பாக்கி வைத்திருந்தனர் என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT