Published : 19 Jun 2023 06:48 AM
Last Updated : 19 Jun 2023 06:48 AM
புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆயுதம் ஏந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து லலித் என்பவரது வீட்டின் கதவை தட்டி அதன் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையடுத்து, கதவை திறந்து வெளியில் வந்த லலித் மற்றும் அவரது இரண்டு சகோதரிகளை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில், சகோதரிகளான 30 வயதான பிங்கி மற்றும் 29 வயதான ஜோதி ஆகியோரின் மார்பிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து சரிந்தனர்.
அக்கம்பக்கத்தார் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அந்த இரண்டு சகோதரிகளும் உயிரிழந்தனர். லலித் மீதும் குண்டுகள் பாய்ந்து லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தேவ் என்ற நபருக்கும், லலித்துக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. ரூ.10,000 ரூபாய் கடனுக்காக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக , அர்ஜூன், மைக்கேல் மற்றும் தேவ் ஆகிய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, இதர குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் டெல்லியில் சகோதரிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் ‘‘அந்த பெண்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த சம்பவத்தால் டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஆம் ஆத்மி அரசின் கீழ் இருந்திருந்தால் டெல்லி மிகவும் பாதுகாப்பாக இருந்திருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT