Published : 18 Jun 2023 06:17 PM
Last Updated : 18 Jun 2023 06:17 PM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பட்டப்பகலில் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறிபடி சிதறி ஓடினர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு, சொத்துக்காக கூலிப்படை மூலம் தாயே, மகனை கொலை செய்தார். இந்த கொலையில் கூலிப்படையாக செயல்பட்ட மதுரை திருமோகூரைச் சேர்ந்த வினீத் (29) என்பவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காரில் தனது நண்பர்களுடன் காரைக்குடி வந்த வினீத், புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று காலை காவல்நிலையத்தில் கையெழுத்திட, வினீத் விடுதியில் இருந்து இறங்கினார். அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வாளோடு விரட்டியது. தப்பியோடியபோது கால் தடுமாறி விழுந்த அவரை அந்த கும்பல் வெட்டியது. இதை பார்த்த வினீத்தின் நண்பர் ஒருவர், வாளை எடுத்துக் கொண்டு அந்த கும்பலை விரட்டினார். ஆனால் அந்த கும்பல் அவரையும் வெட்டிவிட்டு, காரில் ஏறியது. மீண்டும் விரட்டி சென்ற வினீத்தின் நண்பர், அந்த காரை வாளை வைத்து தாக்கினார். அதற்குள் அந்த கும்பல் தப்பியது. இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியபடி சிதறி ஓடினர்.
அங்கு வந்த காரைக்குடி வடக்கு போலீஸார் காயமடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் அதற்குள் வினீத் உயிரிழந்தார். தொடர்ந்து காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான தனிப்படையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே வினீத் மீது மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திமுக ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்த கும்பல்: கொலை குற்றவாளிகள் தாங்கள் வந்த காரில் ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்தனர். அந்த காரை போலீஸார் சோதனையிடாமல் இருக்க திமுக ஸ்டிக்கர் ஒட்டி இருந்தனர். அதேபோல் வினீத் தரப்பினரும் காரில் ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.ஆனால் கோவிலூர், ரயில்வே சாலை ரயில்வே கேட் அருகே, ஸ்ரீராம்நகர் செல்லும் வழி, கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடிகள் இருந்தும் போலீஸார் இல்லாததால் அந்த இரு கார்களையும் சோதனையிடவில்லை என புகார் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT