Published : 18 Jun 2023 08:59 AM
Last Updated : 18 Jun 2023 08:59 AM
கோவை: கோவையில் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணிலிருந்து சமீபத்தில் அழைப்பு வந்தது.
அதில், அரசுக் கல்வி உதவித் தொகை வழங்கும் பிரிவிலிருந்து பேசுவதாகக் கூறி, ‘உங்கள் பிள்ளைகள் அரசின் கல்வி உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், உதவித் தொகை பெறுவதற்கான ‘க்யூஆர்’ குறியீட்டை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பி விடுவோம். அதை ‘ஸ்கேன்’ செய்தால் தொகை வந்து விடும் எனக் கூறியுள்ளனர்.
ஆனால், குறியீட்டை ‘ஸ்கேன்’ செய்த அடுத்த சில நொடிகளில், பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்த தொகை மாயமானது. தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர் சிலர், மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் செளரிபாளையத்தைச் சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸ் ராஜ் (28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாய ராஜ் (31), மாணிக்கம் (34) ஆகியோர் மேற்கண்ட மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது கூட்டுச் சதி, மோசடி, போலியான ஆவணங்கள் தயாரித்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தனர்.
புது டெல்லியில் பயிற்சி: கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்டவர்கள் மாணவ, மாணவிகள் குறித்த தரவுகளை மோசடி கும்பலிடம் பெற்று, அதைப் பயன்படுத்தி பெற்றோரை ஏமாற்றியுள்ளனர். இதுவரை 10 பேர் புகார் அளித்துள்ளனர். ரூ.7 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இவர்கள், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களிடமும் மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.
புதுடில்லியில் இவர்களுக்கு தெரிந்த நபர் மூலம், சைபர் கிரைம் மோசடிகளை செய்வது குறித்து பயிற்சி எடுத்து, மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கைதானவர்கள் மேற்கண்ட மோசடி யுக்தி மட்டுமின்றி, லாட்டரி, ரிவார்டு பாய்ன்ட் உள்ளிட்ட மேலும் 4 மோசடி திட்டங்களை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து லேப்டாப், 22 சிம்கார்டுகள், 44 செல்போன்கள், 7 ஏ.டி.எம் கார்டுகள், 7 வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT