Published : 18 Jun 2023 10:12 AM
Last Updated : 18 Jun 2023 10:12 AM

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.4,400 கோடி மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 14 பேரைக் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.3,34,000 பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்பிலான 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 162 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.14.47 கோடி பணத்தை முடக்கியதுடன், ரூ.75.6 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், ரூ.90 கோடி மதிப்பிலான 54 அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நிறுவன இயக்குநர் சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவரும், ஐசிஎஃப் ஊழியருமான கோவிந்த ராஜுலுவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் அதிக வட்டி தருவதாகக் கூறி, ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கை முடக்கி வைத்திருப்பதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x