Published : 16 Jun 2023 03:55 PM
Last Updated : 16 Jun 2023 03:55 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மணல் திருட்டைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் ஒருவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனதைப் பதறவைக்கும் இந்தச் சம்பவம் கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம், ஜேவராகி தாலுகாவில் உள்ள நாராயண்புரா கிராமத்தில் நடந்துள்ளது. சம்பவம் நடந்த வியாழக்கிழமை நெலோகி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் மயுரா சவுகான் (51) திருட்டு மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது வாகனத்தை நிறுத்தாத ஓட்டுநர், மயுரா மீது டிராக்டரை ஏற்றியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், டிராக்டர் ஓட்டுநர் சித்தண்ணாவைக் கைது செய்துள்ளனர். கைதானவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,"சித்தண்ணா, திருட்டு மணல் ஏற்றிச்செல்லும் போது தனது வாகனத்தைத் தடுத்த நிறுத்த முயன்ற காவலரை வாகனம் ஏற்றிக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்தச்சம்பவம் குறித்து கலபுரகி எஸ்பி, இஷா பண்ட் கூறுகையில்," ஜூன் 15-ம் தேதி மணல் திருட்டைத் தடுத்து நிறுத்த முயன்ற தலைமைக் காவலர் மயுரா சவுகானை டிராக்டர் ஏற்றிக் கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
"இந்தச் சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கர்நாடகா அமைச்சர் டாக்டர் எம்சி சுதாகர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அமைச்சர் ப்ரியங் கார்கே கூறுகையில்,"மணல் திருட்டுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கும் மீண்டும் ஒருமுறை கடுமையாக உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக குற்றச்சாட்டு: இந்த சம்வம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,"கலபுரகியில் தலைமைக் காவலர் ஒருவர் மணல் மாஃபியாவால் டிராக்டர் ஏற்றிக்கொல்லை செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்கு நன்றி. ஊழல் மற்றும் வாக்கு வங்கிக்காக மாநிலத்தில் தீவிரவாதிகள் மற்றும் மாஃபியாக்களை சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது அங்கு சட்ட ஒழுங்கை சீர்குலைத்துள்ளது.
ராஜஸ்தானிலிருந்து கர்நாடகா வரை காங்கிரஸ் என்றால் வாக்குறுதிகள் மறப்பது மற்றும் மாஃபியாக்களை ஊக்குவிப்பது என்றே அர்த்தம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT