Published : 16 Jun 2023 07:14 AM
Last Updated : 16 Jun 2023 07:14 AM
சென்னை: மின் வாரியத்தில் அரசு வேலைவாங்கித் தருவதாக ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்ததாக அதிமுக தலைமைக் கழகபேச்சாளர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
சென்னை, தரமணி, எம்.ஜி.நகர், காந்தி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (57).இவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``கடந்த 2018-ம்ஆண்டு திருவான்மியூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (70) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் எனது மகளுக்குத் தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
வேலை வாங்கித் தருவதற்காக அவர் கேட்டபடி ரூ.15 லட்சத்து 75 ஆயிரத்தைக் கொடுத்தேன். ஆனால், அவர் உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தரமணி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பரமேஸ்வரி புகாரில் கூறியிருந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், புகாருக்கு உள்ளான குணசேகரனை கைது செய்தனர். பின்னர், அவரைநீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள அவரதுமனைவி சொக்கியை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட குணசேகரன் அதிமுக தலைமைக்கழக பேச்சாளராக இருப்பதாகபோலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT