Published : 15 Jun 2023 01:57 PM
Last Updated : 15 Jun 2023 01:57 PM

திருப்பூரில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் - பின்புலம் என்ன?

திருப்பூர்: திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் உட்பட பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். சமீப காலமாக திருப்பூருக்கு ரயில் நிலையங்கள் வழியாக கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் வரத்து அதிகரித்துள்ளன.

இதை கண்காணித்து, போதை புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்என எதிர்பார்க்கின்றனர், திருப்பூர் தொழில் துறையினர். அவர்கள் கூறும்போது, “குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளர்கள் சிலர் கஞ்சா, குட்கா உட்பட பல்வேறு வகையான புகையிலை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஒடிசா, கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் ரயில் வழியாக வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குட்கா பொருட்களை அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நபர்களும், நிறுவனங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர், இங்கு வந்துபகல் நேரங்களில் வேறு வேலைகள் செய்துகொண்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்களை இரவில் வியாபாரம் செய்கின்றனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில்பணியாற்றும் முதலிபாளையம், பெருமாநல்லூர், திருப்பூர் அனுப்பர்பாளையம், திருமுருகன் பூண்டி, அவிநாசி, பல்லடம், கணியாம்பூண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகளில் சர்வ சாதாரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன” என்றனர்.

காவல்துறையினரிடம் கேட்டபோது, “பெருமாநல்லூர் பகுதியில் பிரதானமாக விற்பனையில் ஈடுபடுபவர்களின் மூலம் எளிதாக தொழிலாளர்களின் கைகளில் கஞ்சா சென்று சேர்கிறது. பிஹார், ஒடிசா மற்றும் ஆந்திரா, கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்குள் கஞ்சாதாராளமாக வருகிறது.

அவிநாசி, பரமசிவம்பாளையம், தெக்கலூர், தேவம்பாளையம், பொங்குபாளையம், பெருமாநல்லூர், நியூதிருப்பூர் மற்றும் ஈட்டிவீரம்பாளையம் ஆகிய பகுதிகளில் புகையிலை மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் உள்ளது. இதனை கண்காணிக்க நியமிக்கப்பட்டவர்களும் கண்காணிக்காமல் அவர்களுடன் கூட்டு சேர்ந்துவிடுவதால், பிரதான புகையிலை மற்றும் கஞ்சா விற்பனையாளர்களுக்கு மிகவும் ஏதுவான சூழலாக மாறி விடுகிறது.

5 கிராம் முதல் 10 கிராம் கஞ்சா சந்தையில் ரூ.300 முதல் ரூ.350 வரை தொழிலாளர்களிடம் விற்கப்படுகிறது. இன்னும் சொல்வதென்றால் கஞ்சா, புகையிலை வழக்கில் சிக்கும் நபர்களை கொண்டு, அவர்கள் மூலமாக தொழில் செய்யவும் பலர் முயன்று வருவது தான் வேதனையான விஷயம்.

அவிநாசி, பெருமாநல்லூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வட மாநில தொழிலாளர்கள் கஞ்சா விற்பது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்தாலும், இந்தி தெரிந்த போலீஸார் மூலம் அவர்களை கண்காணிக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.

பெருமாநல்லூரில் ஒரு குறிப்பிட்ட நபர் இதனை கண்காணிக்கிறார் என்றால், அவரை சுழற்சி அடிப்படையில் மாற்றினால் மட்டுமே கட்டுக்குள் வரும். ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் நியமிக்கும்போது, நாளடைவில் அவர்களும் விலைபோக கூடிய சூழல் உள்ளது. இது சமூகத்துக்கு ஆபத்தான விஷயமாகவே மாறும்” என்றனர்.

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் தொடர்ந்து நேர்மையான போலீஸாரை கொண்டு கண்காணித்தால் மட்டுமே, போதை புழக்கம் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுக்குள் வரும். காவல் அதிகாரிகளின் சாட்டை சுழலவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x