Published : 14 Jun 2023 04:00 AM
Last Updated : 14 Jun 2023 04:00 AM
கோவை: பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்தவழக்கு தொடர்பாக, மேலும் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் தடாகம் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 1 வகுப்பு வரை அங்கு படித்த பின்னர், வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்தார். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக மேற்குப் பகுதி மகளிர் போலீஸார் விசாரித்ததில், மாணவி முன்பு படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி (31) அளித்த பாலியல் தொல்லையின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, போக்ஸோ பிரிவில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன்(53) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். உயிரிழந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களான முகமது சுல்தான் (70), மனோராஜ் (58) ஆகியோரை கடந்தாண்டு கைது செய்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவையும் (32) போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவி முறையிட்ட பின்னரும், உரிய தகவலை போலீஸாருக்கு தெரிவிக்காமல் இருந்ததற்காகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அர்ச்சனா மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்த மாணவியின் செல்போனை, சென்னை சைபர் ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தி, அதில் இருந்த உரையாடல்களின் அடிப்படையில் அர்ச்சனா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT