Published : 13 Jun 2023 03:47 PM
Last Updated : 13 Jun 2023 03:47 PM

சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு வித்திடும் ராணுவ வீரரின் ஆடியோ: அதிகாரிகள் உடன் தி.மலை எஸ்பி ஆலோசனை

ராணுவ வீரர் பிரபாகரன்

திருவண்ணாமலை: சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆடியோ வெளியிட்ட ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு கிராமத்தில் கடையை காலி செய்வதில் ராணுவ வீரர் பிரபாகரன் குடும்பத்துக்கும், கடையை கட்டி வாடகைக்கு விட்டிருந்த குன்னத்தூர் கிராமத்தில் வசிக்கும் குமார் மகன் ராமு தரப்புக்கும் கடந்த 10-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. ராமுவை ராணுவ வீரரின் மைத்துனர்கள் ஜீவா, உதயா ஆகியோரை கத்தியால் தாக்கி உள்ளனர். ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் கீர்த்தியை ராமு தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரண்டு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கீர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ராமு ஆதரவாளர்கள் செல்வராஜ், ஹரிகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மனைவி கீர்த்தியை அரை நிர்வாணமாக்கி மானபங்கம் படுத்தி தாக்கியதாகவும், கடையை 120 பேர் சூறையாடிதாகவும், மனைவி மற்றும் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மண்டியிட்டு தமிழக டிஜிபிக்கு வேண்டுகோள் விடுத்து ராணுவ வீரர் பிரபாகரன் பேசும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

காவல் துறை நடத்திய விசாரணையில், ராணுவ வீரரின் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்தது. ராணுவ வீரர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், "ராணுவ வீரருக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனர், அவரது மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை, மிகைப்படுத்தப்பட்டுள்ளது, ராணுவ வீரர் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளோம். இரண்டு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உறவினர் வினோத் என்பவருடன் ராணுவ வீரர் பிரபாகரன் பேசும் ஆடியோ இன்று (ஜூன் 13) வெளியானது. இதில் அவர், “என் மைத்துனர்கள் ஜீவா, உதயா ஆகியோரிடம் பேச வேண்டும். அடியாட்களை திரட்டாமல் உள்ளனர். நான், எந்தளவுக்கு இறங்கி வேலை செய்துள்ளேன் என்பது நாளைக்கு தெரியவரும். எல்லாம் தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது ஒன்றுக்கு இரண்டாக தெரிவிக்க வேண்டும். எனது வீடியோவை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். சமூக வலைதளம், நாம் தமிழர் மற்றும் பாஜக தரப்புக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.

ஜீவா, உதயா (மைத்துனர்கள்) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. என் மனைவியை அடித்ததற்காக மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விவகாரம் மிக தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. நாம் போராட்டம் நடத்தும்போது 20 பேராவது நமது ஆட்கள் இருக்க வேண்டும். ஜீவா, உதயா வருவார்கள். தங்கையை அடித்தபோது நான் சும்மா இருக்க முடியுமா என பேசுங்கள். கத்தியால் குத்தியதை சொல்லக் கூடாது. செல்வராஜுக்கு களி சாப்பிட நேரம் வந்துவிட்டது. படைவீடு கிராமமே பயத்தில் உள்ளது. என்னிடம் அமைச்சர்கள், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பேசி உள்ளனர். முக்கிய நபர் பேசி உள்ளார். அவர் யார்? என சொல்ல முடியாது. இரவுக்குள் மொத்த நபர்களையும் தூக்கிவிடுவதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ராணுவ வீரர் பிரபாகரன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆடியோவில் பேசியது ராணுவ வீரர் பிரபாகரன் என்பது உறுதியாகி உள்ளது. இதேபோல், ராணுவ அதிகாரியை இழிவாக பேசும் மற்றொரு ஆடியோவும் கிடைத்துள்ளது. சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ராணுவ வீரர் என்பதால், அவர் மீதான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்றார்.

ராணுவ வீரர் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாக தெரிவித்து ஆடியோ வெளியிட்டால் அனுதாபத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும் என்ற அடிப்படையில் மலிவான செயலில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் பிரபாகரன் மீது ராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x