Published : 12 Jun 2023 08:26 PM
Last Updated : 12 Jun 2023 08:26 PM

சென்னை | பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் தாய், மகளுக்கு ஆயுள் தண்டனை: மகளிர் நீதிமன்றம் தீரப்பு

சென்னை: திருமணத்துக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணத்துக்கு முன்பாகவே குழந்தை பிறந்ததால், வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் சேர்ந்து, பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் பாத்திரத்தில் அடைத்து, குப்பை தொட்டியில் வீசியதாக கூறப்பட்டது.

குப்பை தொட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கிண்டி காவல் துறையினர், வசந்தி, விஜயா, ஜெயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ஜெயராஜுடன் ஏற்பட்ட காதலால் தான் கர்ப்பமானதாக ஜெயராஜ் மீது வசந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பாஃரூக் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி, காவல்துறை விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை சமர்ப்பித்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜயா, வசந்தி இணைந்து பெண் குழந்தையை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டனர் எனவும் வாதிட்டார்,

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குழந்தையை கொலை செய்த வழக்கில் வசந்தி மற்றும் விஜயா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் வசந்தி, ஜெயராஜை காதலித்ததாக கூறுவதை சந்தேகத்துக்கு இடமின்றி காவல் துறை நிரூபிக்கவில்லை. டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை ஜெயராஜுடையது இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வதும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x