Published : 11 Jun 2023 04:57 PM
Last Updated : 11 Jun 2023 04:57 PM

இலங்கையில் இருந்து கடத்தல் அதிகரிப்பு: கடலுக்கு அடியில் புலனாய்வு துறை தங்க வேட்டை

ராமேசுவரம்: உலக அளவில் தங்கம் அதிகம் புழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 800 டன் அளவில் தங்கம் இறக்குமதியாகிறது.

இதில் 20% இறக்குமதி வரி செலுத்தாமல் உடலில் மறைத்தும், மின்னணுப் பொருட்களில் இணைத்தும், துகள்களாக்கி குளிர்பானம் மற்றும் மதுபானங்கள் மூலமும் தங்கம் கடத்தப்படுகிறது. சில நேரங்களில் எக்ஸ்ரே, ஸ்கேனிங்குக்கும் கூட அகப்படாத விதத்தில் விமான நிலையங்கள் வழியாக பல நூதன முறைகளில் தங்கம் கடத்தப்படுகிறது.

தங்கக் கடத்தலுக்கு மிக முக்கியக் காரணம் நமது நாட்டுக்கும், வெளிநாடுகளுக்குமான தங்கத்தின் விலையில் உள்ள வேறுபாடுதான். குறிப்பாக துபாய் தங்கச் சந்தைக்கும், இந்திய தங்கச் சந்தைக்கும் விலை வேறுபாடு ஒரு காரணம். தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுங்க வரி கட்டுப்பாடுகளால் கடத்தலுக்கு ஏதுவான விமான நிலையங்கள் வழியாகவும், கண் காணிப்புக் குறைவான சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளையும் தேர்ந்தெடுத்து கடத்தல்காரர்கள் தங்கத்தை நம் நாட்டுக் குள் கடத்திக் கொண்டு வருகின்றனர்.

தமிழகத்துக்கு துபாயிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளாலேயே தங்கம் கடத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடல் வழியாக தங்கம் கடத்தி வரப்படுகிறது என்ற தகவல் மத்திய வருவாய் புலனாய்வு துறைக்குக் கிடைத்தது.

கடலோரக் காவல் படையினருடன் இணைந்து சென்றபோது ரோந்து படகைப் பார்த்ததும் கடத்தல்காரர்கள் சுமார் 50 கிலோ தங்கக் கட்டிகளை கடலில் தூக்கி எறிந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோன்று 2 முறை தூக்கி எறியப்பட்டன.இந்தத் தங்கம் கடலோரக் காவல்படையால் மீட்கப் பட்டு 11 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலில் இருந்து மீட்பது எப்படி?: கடலில் தூக்கி எறியப்படும் தங்கத்தை தேடுவது சவா லான பணியாகும். கடலோரக் காவல்படையின் ஸ்கூஃபா நீச்சல் வீரர்கள் கடலுக்கு அடியில் சென்று தங்கத்தைத் தேடுவர். கடலின் நீரோட்டம் அதிகமான நாட்களிலும், கடலில் வெளிச்சம் குறைவான தருணங்களிலும் எக்கோ கருவியின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடக்கும். வெளிச் சம் இல்லாத சேறு நிறைந்த பகுதியில் முத்துக்குளிக்கும் மீனவர்கள் வலையைச் சல்லடை போன்று பயன்படுத்தித் தேடுவர். 3 நாட்கள்கூட தேடி தங்கத்தை மீட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x