Published : 10 Jun 2023 02:52 PM
Last Updated : 10 Jun 2023 02:52 PM

ஆன்லைன் கேம் விபரீதம்: தாயின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 லட்சத்தை காலி செய்த ஹைதராபாத் சிறுவன்

கோப்புப்படம்

ஹைதராபாத்: ஆன்லைன் கேம் மீதான மோகத்தால் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளார். அண்மையில், சீன தேசத்தில் ஆன்லைன் கேம் மோகத்தால் 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 52 லட்ச ரூபாயை செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தின் அம்பேர்பேட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தனது தாத்தாவின் போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடி உள்ளார். அவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கேமை போன்களில் இலவசமாக விளையாடலாம். அவர் இந்த கேமில் அடுத்தடுத்த நிலை (லெவல்) நோக்கி ‘முன்னேற... முன்னேற...’ சிறிது சிறிதாக பணம் செலவழிக்க தொடங்கியுள்ளார். முதலில் ரூ.1,500 என தொடங்கி ரூ.10,000 வரையில் இது சென்றுள்ளது.

இப்படியே வீட்டுக்கு தெரியாமல் இதை அந்த சிறுவன் தொடர்ந்துள்ளார். ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக அவர் இந்தப் பணத்தை செலவு செய்துள்ளார். அது அப்படியே 1.45 லட்சம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை சென்றுள்ளது.

இது தெரியாமல் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க சிறுவனின் தாய், தான் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கில் இருந்த 27 லட்ச ரூபாயும் இல்லை என அறிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்த 9 லட்சம் ரூபாயும் இல்லை என்பதை அறிந்ததையடுத்து, அதோடு இதற்கு காரணம் தனது மகன் என்பதையும் அவர் தெரிந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. அந்தச் சிறுவனின் தந்தை காவல் துறை அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தவர். அந்த 36 லட்ச ரூபாயும் அவரது உழைப்பில் ஈட்டப்பட்டுள்ளது. இதில் அவர் மறைவுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பணமும் அடங்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x