Published : 06 Jun 2023 06:05 AM
Last Updated : 06 Jun 2023 06:05 AM

கோவை | “கடன் உள்ளிட்ட மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுவோரில் 80% பேர் ஐடி நிறுவன ஊழியர்கள்”

தொலைந்து போய் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமை யாளர்களிடம் நேற்று வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன். படம் : ஜெ.மனோகரன்

கோவை: மோசடி செயலிகள் மூலம் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில், தொலைந்து போய் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமை வகித்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள 168 செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இதுவரை 1,160 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும். 3,413 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 3,448 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 84 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 78 வழக்குகளுக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 7 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினர் இணைந்து அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்களுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 276 கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ பகுதி-2 திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் குறித்தும், போதைப்பொருள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சுய பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களில் கடன் வழங்கும் செயலி, ஆன்லைன் முதலீடு குறித்த செயலி ஆகியவற்றின் மூலம் அதிகம் மோசடி நடக்கிறது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் ஐடி நிறுவன ஊழியர்களாக உள்ளனர். எனவே, மேற்கண்ட செயலிகள் சார்ந்த குற்றங்கள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x