Last Updated : 02 Jun, 2023 03:48 PM

 

Published : 02 Jun 2023 03:48 PM
Last Updated : 02 Jun 2023 03:48 PM

விருதுநகரில் 5 மாதங்களில் பதிவான 158 வழக்குகளில் 124 பேர் கைது - 127 பவுன் நகைகள் மீட்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவான 158 திருட்டு, கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 124 பேர் கைது செய்யப்பட்டு ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் இன்று அளித்த பேட்டியில், "விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 3 கொள்ளை வழக்குகள், 20 வழிப்பறி வழக்குகள், 135 திருட்டு வழக்குகள் என 158 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிமிருந்து ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிவகாசியில் கடந்த வாரம் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிமிருந்து 21.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சூலக்கரை அருகே பெண்ணை தாக்கி தோடுகளை பறித்துச் சென்ற நபர்களையும் சூலக்கரை போலீஸார் கைது செய்து நகையை மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 47 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டோருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இதில், 5 வழக்குகளில் சாகும்வரை சிறைத் தண்டனையும், 6 வழக்குகளில் 22 முதல் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 வழக்குகலில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 2 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு அதிக தண்டனை பெற்றுத்தரப்படுவதால், குற்றங்கள் குறைந்துள்ளன. அதோடு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து புகார் கொடுக்கின்றனர். கடந்த 5 மாதங்களில் 97 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில், சாத்தூர் மேட்டமைலையைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் மனநலம் குன்றிய சிறுமியை கடந்த பிப்ரவரி 27ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் 3 மாதங்களில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு வழக்கு ஒரு காவலர் என்ற வகையில் ஒவ்வொரு வழக்கையும் ஒரு காவலர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 404 வழக்குகளுக்கு 112 காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சாட்சிகளுக்கு விரைவாக சம்மன் அனுப்பி உரிய நேரத்தில் அனைத்து ஆதரங்களும், சாட்சிகளும், சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படுகிறது" எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் கூறினார். அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணைகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x