Published : 04 Jul 2022 08:07 PM
Last Updated : 04 Jul 2022 08:07 PM

தமிழகத்தில் புதிதாக 2,654 பேருக்கு கரோனா பாதிப்பு; சிகிச்சையில் 15,616 பேர்

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,449, பெண்கள் 1,205 என மொத்தம் 2,654 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1066 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 85,429 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 31,787 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,542 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,616 ஆக உள்ளது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,672ஆகவும், சென்னையில் 1,072 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக 1000-ஐ கடந்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 16,135 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 13,958 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.98 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழகத்தில் நேற்றைக்கு 2622 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 14,504 பேர் ஆக்டிவ் கேஸ் என்கின்ற வகையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 சதவீதம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் பெரும்பாலோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தொற்றின் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் அறிவுறுத்தலுக்கேற்ப தொற்று அதிகம் பரவியிருக்கிற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும் என்கின்ற வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருகிற 10ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் 34,46,000 பேர் உள்ளனர். இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் 1,08,21,539 பேர் உள்ளனர். ஆக 1,45,00,000 பேரும் இலக்கு வைத்து லைன் லிஸ்ட் தயாரித்து வீடுகள் தோறும் சென்று 10ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

12 வயது முதல் 14 வயதிற்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15 வயது முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளில் போடும் பணி நடைபெற்று வருகிறது. முதலியார்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகத்தை பொறுத்த வரை 12 வயது முதல் 14 வயது வரை தடுப்பூசி இலக்கு என்பது 21,21,000 பேர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 86.09 சதவீதம் பேர். முதல் தவணை முடிந்து 29 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படவேண்டியர்கள் 58.03 சதவீதம் பேர். அதில் யாருக்கெல்லாம் போட வேண்டும் என்று ஆசிரியர்களிடம் கேட்டறிந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 95 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 85.37 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். செங்கல்பட்டை பொறுத்தவரை முதல் தவனை 90.5 சதவீதமாகவும், 74.73 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவிலான சதவீதத்தை எட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான 14,504 பேர்களில் வீடுகளில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் விதிமுறைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது எழவில்லை.

முகக்கவசம் அணிந்து கொள்வது என்பது நம்மை நாம் தற்காத்துக் கொள்வது, முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போடுவது சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையில் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளி விழா, சமூக விழா, அரசியல் நிகழ்வுகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x