Published : 06 May 2022 12:11 AM
Last Updated : 06 May 2022 12:11 AM
புது டெல்லி: இந்திய நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசின் தரவுகளை காட்டிலும் அதிகம் என தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம். 'இல்லவே இல்லை' உங்கள் கணக்கீடு தவறு என மறுத்துள்ளது இந்திய அரசு.
கடந்த ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2021 வரையில் இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம். இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலை காட்டிலும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம். மேலும் இந்த எண்ணிக்கை உலக அளவில் இதுவரையில் ஏற்பட்டுள்ள கரோனா உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தான் இந்திய அரசு தவறு என சொல்லியுள்ளது.
உலக அளவில் 1.5 கோடி பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் இப்போது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள 60.2 லட்சம் உயிரிழப்பை காட்டிலும் சுமார் 90 லட்சம் அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 வாக்கில் சீன தேசத்தில் கரோனா தொற்று பரவல் தொடங்கியது. படிப்படியாக இந்த தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020-இல் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டும் மாநில அளவில் பொது முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் ஆரம்பமானது. தொற்று பரவல் தொடங்கியது முதல் இன்று வரை மாநில மற்றும் மத்திய அரசு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், உயிரிழந்தோர், சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனா இதுவரை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 4.31 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3,274 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5.24 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் இந்த அறிக்கையை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020-இல் 4,74,806-க்கும் மேற்பட்ட மரணங்கள் சிவில் பதிவு முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வாதம் என்ன? அதிக உயிரிழப்பு தொடர்பான உலக சுகாதார மையத்தின் (WHO) கணக்கீட்டு முறை மற்றும் அதற்கான தரவுகள் குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் விஞ்ஞான ரீதியாக கேள்விக்குரிய வழிமுறையை பிரதிபலிப்பதாகவும் சொல்லியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம். மேலும் தங்கள் தரப்பில் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்த சூழலில், அதிகப்படியான இறப்புகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பல்வேறு தரவு மாதிரிகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பி உள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு உலக சுகாதார மையம் கொடுத்துள்ள விளக்கம் என்ன? இந்த அதிகப்படியான உயிரிழப்பு எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவலுக்கு பின் மற்றும் அதற்கு முன் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம்.
அதிகப்படியான உயிரிழப்பு எண்ணிக்கை என்பது நேரடியாக தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் அல்லது சமூக அளவிலும், சுகாதார ரீதியாகவும் பெருந்தொற்று தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளால் நிகழ்ந்த உயிரிழப்புகளை உள்ளடக்கியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டவர்கள் தொற்று பரவல் அதிகம் இருந்த காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சைக்கான அணுகல் கிடைக்காமல் உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று பரவலுக்கு முன்னதாக உலகளவில் ஏற்படும் 10-இல் ஆறு உயிரிழப்புகள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம். அதோடு இன்னும் பிற மாடல்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது உலக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை காட்டிலும் பெருந்தொற்று நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ஐ.வி, ஸ்பானிஷ் காய்ச்சல் மாதிரியான தொற்றுகள் ஏற்பட்ட போதும் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை காட்டிலும் உயிரிழந்தவர்கள் அதிகம் என சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT