Published : 01 May 2022 08:00 PM
Last Updated : 01 May 2022 08:00 PM

தமிழகத்தில் குறையும் கரோனா: புதிதாக 47 பேருக்கு பாதிப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று ஆண்கள் 25, பெண்கள் 22 என மொத்தம் 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,979 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,440 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 46 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 514 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 49 ஆகவும், சென்னையில் 36 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ''கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்து கரோனா பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. 70 சதவீத நோய்கள் கால்நடைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. கரோனா பாதிப்பை பொருத்தவரை, முதல்வர் உத்தரவின் பேரில் தொடர்ந்து கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதால் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. சென்னை ஐஐடியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் இதுவரை 7,300 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பாதிப்பு 196 என்று இருந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது. 30-ம் தேதி (நேற்று) பாதிப்பு 13 ஆக உள்ளது. இப்போது ஐஐடியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அதேநேரம், வெளியில் யாருக்காவது பாதிப்பு இருந்து முகக் கவசம் அணியாமல் கூட்டமாக இருக்கும்போது அந்த நபர் மூலம்பரவல் ஏற்பட்டு எண்ணிக்கை உயரலாம்.

டெல்லியில் தற்போது கரோனா பாதிப்பு தினசரி 100-க்கு மேல் என்ற அளவில் இருந்து வருகிறது. அதோடு உயிரிழப்புகளும் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தை பொருத்தவரை உயிரிழப்புகளை குறைத்துவிட்டோம்'' என்றார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x