Published : 18 Apr 2022 06:49 AM
Last Updated : 18 Apr 2022 06:49 AM

கரோனா நோயாளிகள் இறப்பு | வெவ்வேறு கணக்கீடுகளை பின்பற்றுவது ஏன்? - உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா கேள்வி

புதுடெல்லி: கரோனா உயிரிழப்பு விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு வெவ்வேறு கணக்கீடுகளை பின்பற்றுவது ஏன் என்று மத்திய சுகாதாரஅமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரையின் சாரம்சம் வருமாறு: சர்வதேச நாடுகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 2021-ம் ஆண்டு இறுதி வரை கரோனாவால் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 1.5 கோடி பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது.

இந்தியாவில் 5.2 லட்சம் பேர் கரோனாவில் உயிரிழந்திருப்பதாக அந்த நாடு கூறுகிறது. ஆனால் 40 லட்சம் பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. பல்வேறு நாடுகள் கரோனா உயிரிழப்பு குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை வழங்காததால் உலகளாவிய உயிரிழப்பு குறித்த விவரங்களை உலக சுகாதார அமைப்பால் வெளியிட முடியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா உயிரிழப்பு விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு கணக்கீடுகளை பின்பற்றுகிறது. இது ஏன் என்பது குறித்து கேட்டு அந்த அமைப்புக்கு 6 கடிதங்களை அனுப்பியுள்ளோம். இதுவரை அந்த அமைப்பு திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து இதர நாடுகளிடமும் இந்தியாவின் கருத்தை எடுத்துரைத் துள்ளோம்.

உலக சுகாதார அமைப்பின் கணக்கீடு குறித்து இந்தியா மட்டுமல்ல, சீனா, ஈரான், வங்கதேசம், சிரியா, எத்தியோப்பியா, எகிப்துஉள்ளிட்ட நாடுகளும் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தியாவில் 130 கோடி மக்கள் வசிக்கின்றனர். மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கும் மிகச் சிறிய நாடான துனிசியாவுக்கும் ஒரேவிதமான கணக்கீடு எவ்வாறு பொருந்தும்?

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கரோனா உயிரிழப்பு குறித்து வழங்கிய புள்ளி விவரங்களில் குளறுபடிகள் உள்ளன. இதை உலக சுகாதார அமைப்பிடம் நேரடியாக சுட்டிக் காட்டியுள்ளோம். முதல் தரவரிசை பட்டியல்நாடுகளில் இராக்கை சேர்த்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

புள்ளிவிவரங்களை சேகரிப்பதில் இந்தியா முன்னோடி நாடாகவிளங்குகிறது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இந்தியா குறித்த பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. மற்ற நாடுகளின் புள்ளிவிவரங்களை சேகரிக்க முடியவில்லை என்று அந்த நாளிதழ் கூறியிருப்பது வேடிக்கையானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x