Published : 07 Apr 2022 05:37 AM
Last Updated : 07 Apr 2022 05:37 AM
மும்பை: மும்பையில் ஒருவருக்கு புதிய வகை வைரஸான ஒமைக்ரான் எக்ஸ்இ தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடியது என்பதால் மக்களிடையே மீண்டும் அச்சம் ஏற் பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தன.
கரோனா வைரஸில் இருந்து பல்வேறு திரிபுகள் ஏற்பட்டு அவையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. டெல்டா, ஒமைக்ரான் என பலவகையில் இந்த வைரஸ் உருமாறி பரவி, கடந்த 2 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கரோனா 2-வது அலையால் இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து உருமாறிய வைரஸான ஒமைக்ரான் பரவத் தொடங்கியது. இது கரோனா 3-வது அலையாக பரவத் தொடங்கி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனிடையே, கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து வந்தது. இதையடுத்து உலகின் பல நாடுகளும் தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தின. சர்வதேச விமான சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து மார்ச் இறுதியில் பெருமளவு குறைந்தது. இதனால், கரோனா கட்டுப்பாடுகள் கடந்த 31-ம் தேதியுடன் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக ஒமைக்ரான் எக்ஸ்இ என்ற திரிபு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் எக்ஸ்இ வகை வைரஸானது 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தியாவிலும் முதல் முறையாக ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒருவருக்கு இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மும்பை பெருநகர ஆணையர் இக்பால் சிங் சஹல் கூறியதாவது:
இந்தியாவில் முதன்முதலாக புதிய வடிவிலான வைரஸ் ஒருவரை தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரான் எக்ஸ்இ வகை என்பதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய வகை வைரஸ் தொற்று கொண்ட நோயாளிக்கு இதுவரை கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை.
மும்பையில் கரோனா பாதிப்பு ஏற்பட்ட 230 பேரின் மாதிரிகள், மரபணு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் 228 பேருக்கு ஒமைக்ரான், ஒருவருக்கு கப்பா, ஒருவருக்கு எக்ஸ்இ திரிபு வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 230 பேரில் 21 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில் உள்ளனர். இருப்பினும் அவர்களில் யாருக்கும் ஆக்ஸிஜன் அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களில் 12 பேர் தடுப்பூசி போடாதவர்கள். 9 பேர் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் புதிய வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT